×

ஹெர்னியா அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர் ஆர்.கண்ணன்

நம் உடலில் காணப்படும் குறைபாடுகளில் ஹெர்னியா (Hernia) எனப்படும் குடலிறக்கம் மிக முக்கியமானதாகும். ஆனால் குடலிறக்கத்தைப் பற்றி சரிவரத் தெரியாததால், பாதிப்புகள் ஏற்பட்டப் பின்னரே நிறையபேர் அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் நிலை உள்ளது. எனவே, இவற்றைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் ஆர்.கண்ணன்.

ஹெர்னியா (குடலிறக்கம்) என்றால் என்ன?

நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைநார்கள் பழுது அடைந்து இருந்தாலோ அல்லது பிறவிலேயே தசை பழுது அடைந்து ஓட்டையுடன் இருந்தாலோ வயிற்றின் உள் இருக்கும் குடல் இதன் வழியாக இறங்கி வருவதையே குடலிறக்கம் என்கிறோம்.

ஹெர்னியா ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

இதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட காரணங்களைக் கூறலாம்.

*தொடர் இருமல் (குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், காசநோய் போன்றவற்றால் ஏற்படும் நாள்பட்ட இருமல்)
*சிறுநீர் அடைப்பு வியாதிகள் (prostate வீக்கம் மற்றும் சிறுநீர்ப்பாதை சுருக்கம்)
*மலச்சிக்கல்
*உடல் பருமன்
*அதிகமான எடை மற்றும் பளு தூக்குதல்
*அடிக்கடி குழந்தை பெறுதல் போன்றவைகளாகும்.

ஹெர்னியா எந்த வயதில் வரும்?

ஹெர்னியா பிறந்த குழந்தை முதல் எந்த வயதினருக்கும் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் வரும். சிறுவர்களுக்கும், இளம் வயது ஆண்களுக்கும் அதிகளவில் வரக்கூடும்.

ஹெர்னியா எத்தனை வகைப்படும்?

ஹெர்னியா உடலில் வரும் இடத்தைப் பொருத்து பலவகைப்படும். இதில், Inguinal Hernia, Umbilical Hernia, Incisional Hernia (வெட்டுசார் குடலிறக்கம்) மற்றும் Femoral Hernia போன்றவை முக்கியமானவை.

இன்கைனல் ஹெர்னியா என்றால் என்ன? எங்கே வரும்?

ஆண் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது, விரைகள் வயிற்றின் பின் சுவர் பக்கத்தில் இருக்கும். பின் அது Inguinal Canal எனப்படும் பாதை வழியாக நகர்ந்து கீழிறங்கி விதைப்பைக்குள் சேரும். அதன் பின்னர் அப்பாதை பெரும்பாலும் மூடிக்கொள்ளும். அவ்வாறு மூடாவிட்டால் வயிற்றில் உள்ள குடல் இறங்கி வருவதையே இன்கைனல் ஹெர்னியா என்கிறோம். இதுவே ஹெர்னியாவில் முக்கியமான வகையாகும். சுமார் 75% பேர் இந்த ஹெர்னியாவால்தான் பாதிக்கப்படுகின்றனர்.

இன்கைனல் ஹெர்னியா அடிவயிற்றில் இடுப்புப் பகுதிக்கு கீழேதான் அதிகளவில் வரும். ஆண்களுக்கு பெண்களை விட 20 மடங்கு அதிகமாக வரும். இடதுபுறத்தை விட வலதுபக்கம் மூன்றில் இரண்டு மடங்கு அதிகம் வரும். ஆரம்பத்தில் மாலை நேரத்தில் வீக்கம் இருக்கும். படுத்து காலையில் எழுந்தால் வீக்கம் முழுவதுமாக மறைந்து விடும்.

தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன?

தொப்புள் கொடியில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக குடலிறக்கம் ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு 12 முதல் 18 மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலும் மூடிக்கொள்ளும். அவ்வாறு மூடாவிட்டால் அறுவை சிகிச்சை அவசியம். மேலும் மற்ற வயதினருக்கு Umbilical Hernia-வுக்கு அறுவைசிகிச்சை கண்டிப்பாக செய்ய வேண்டும். இது ஆண்களை விட பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகமாக வரும்.

பெமரல் ஹெர்னியா என்றால் என்ன?

வயிற்றுக்கு கீழே தொடைப்பகுதியில் வரும் ஹெர்னியா பெமரல் ஹெர்னியா ஆகும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக வரும்.

வெட்டுசார் குடலிறக்கம் என்றால் என்ன?

வயிற்றில் ஒருமுறை செய்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பக்க தசைகள் பலவீனப்பட்டு தையல்விட்டுப் போனால் (உதாரணமாக சிசேரியன், கர்ப்பப்பை அகற்றுதல், குடல் வால் நீக்குதல், கேன்சர் அறுவைசிகிச்சை), வெட்டுசார் குடலிறக்கம் (அறுவைசிகிச்சைக்கு முன்பு) வெட்டுசார் குடலிறக்கம் உருவாகும்.

ஹெர்னியாவை மருந்தால் குணப்படுத்த முடியுமா?

ஹெர்னியாவை மருந்தால் குணப்படுத்த முடியாது. அதற்கு அறுவைசிகிச்சையே நிரந்தர தீர்வு இதனை சாதாரண அறுவைசிகிச்சை திறந்தநிலை முறையிலும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை முறையிலும் செய்யலாம்.

ஹெர்னியாவால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

ஹெர்னியா உள்ள இடத்தில் வீக்கத்துடன் வலியும் உண்டாகும். சில நேரங்களில் வெளியே வந்த குடல் மீண்டும் வயிற்றுக்குள் திரும்பாது. இதனை Irreducible hernia என்கிறோம். ஒரு சிலருக்கு வெளியே வந்த குடல் அடைத்துக் கொள்ளும். இதனை obstructed Hernia என்கிறோம். மேலும், ஒரு சிலருக்கு அடைப்பட்டக் குடல் அழுகிப் போகும். இவை மூன்றுமே ஆபத்தானவை இவைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.

Incisional Hernia ஏன் ஏற்படுகிறது?

இதற்கு வயிற்று சுவர் வலிமை இழந்து போவதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் அறுவைசிகிச்சை செய்த இடத்தில் நோய்த் தொற்று ஏற்படுதல் உடலில் புரதச்சத்து குறைதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான ஓய்வின்மை அளவுக்கதிகமான உடற்பயிற்சி மற்றும் வேலைப்பளு ரத்த சோகை நோய் உடல் பருமன் போன்ற
காரணங்களால் ஏற்படுகிறது.

எல்லா வகை ஹெர்னியாவுக்கும் லேப்ராஸ்கோப்பி முறை நல்லதா?

ஹெர்னியாவில் ஏற்படும் பாதிப்புகளுக்கு (obstructed Hernia, Strangulated Hernia, Huge, inguinal Hernia மற்றும் Large Incisional Hernia ஆகியவற்றுக்கு லேப்ராஸ்கோப்பி முறை சிறந்ததல்ல. மற்ற வகை ஹெ ர்னியாவுக்கு லேப்ராஸ்கோபி சிறந்த முறையாகும்.

லேப்ராஸ்கோப்பி முறையில் ஹெர்னியா எவ்வாறு சரிசெய்யப்படுகிறது?

சிறுதுளைகள் மூலம் லேப்ராஸ்கோப்பி கருவியை வயிற்றுப்பகுதியில் செலுத்தி, குடலிறக்கப் பகுதியில் உள்ள குடலை வயிற்றுக்குள் தள்ளி, அந்த இடத்தில் mesh வைத்து சரிசெய்யப்படுகிறது. இதன் மூலம் நார் போன்ற திசுக்கள் அந்த வலையோடு சேர்ந்து கெட்டியான சுவராக உருவாகி, தளர்ந்து போன வயிற்றுச்சுவரை பலப்படுத்திவிடும். இதனால் மீண்டும் ஹெர்னியா வர வாய்ப்பில்லை.

வயிற்றுக்குள் mesh வைப்பதால் எந்த பாதிப்புகளும் வராதா?

வயிற்றுக்குள் Sterlized Meshஐ வைப்பதால் எந்த பாதிப்பும் வராது. இன்கைனல் ஹெர்னியாவுக்கு புரோலேன் மெஷ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இன்ஸ்சிஷனல் ஹெர்னியா மற்றும் அம்பிலிக்கல் ஹெர்னியாவுக்கு பில்லயர்ட் மெஷ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் (Proceed / paritex) இதில் உள்ள ஒரு லேயர் குடலோ அல்லது கொழுப்போ ஒட்டாதவாறு பாதுகாக்கப்படுகிறது. மற்றொரு லேயர் வயிற்றுத் தசையை மேலும் வலிமையாக்குகிறது.

லேப்ராஸ்கோப்பி முறையில் என்ன நன்மைகள்?

லேப்ராஸ்கோப்பி முறையில் செய்தால் வலி அதிகம் இருக்காது. சிறு தழும்புதான் இருக்கும். ஓரிரு நாட்களிலேயே வீட்டிற்கு செல்லலாம். மேலும் நான்கு அல்லது ஐந்து நாட்களிலேயே நாம் அன்றாட வேலைகளை செய்ய இயலும்.ஹெர்னியாவுக்கு ஆபரேசன் செய்தபிறகு நாம் மீண்டும் பழையமாதிரியே வேலை செய்ய முடியாது என்று கூறுகிறார்களே.. அது உண்மையா?

இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த நவீன மருத்துவ உலகில் உள்ள புது புது முறைகளிலும், மேலும் தசைப்பகுதியை வலுவூட்டக் கூடிய பலவகைப்பட்ட மெஷை வைத்து சரிசெய்யும் போதும், எந்த குறைபாடும் வராது. ஹெர்னியாவும் மீண்டும் வராது. நாம் எல்லா வகையான வேலைகளையும் (உதாரணமாக பளுதூக்குதல் மற்றும் கடுமையான உடற்பயிற்சி) மற்றவர்களைப் போல சாதாரணமாகச் செய்யலாம்.

ஹெர்னியா அறுவைசிகிச்சை பிந்தைய பராமரிப்பு என்னென்ன.. என்ன செய்ய வேண்டும்?

* சாதாரண முறையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால் இரண்டு வாரங்கள் வரை கடுமையான வேலைகள் செய்யக்கூடாது.
* நீண்ட பயணம் தவிர்க்க வேண்டும்
* இருமல் மற்றும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஹெர்னியா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

* மலச்சிக்கல் தவிர்த்தல்
* நீண்ட நாள் இருமலுக்கு தகுந்த சிகிச்சை எடுத்தல்
* சிறுநீர் பாதை அடைப்பு வராதவாறு பார்த்துக் கொள்ளுதல்
* அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதைத் தவிர்த்தல்
* உடல் பருமன் அடையாமல் பார்த்துக் கொள்ளுதல்
* புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டு விடுதல்.

The post ஹெர்னியா அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,R. Kannan ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...